Show all

புதிராக உள்ள கட்டாயத் தலைக்கவசச் சட்டம்.

கட்டாயத் தலைக்கவசம் அணியச் சொல்லும் உத்தரவை மறுஆய்வுச் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தலைக்கவசம் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.

உயர்நீதிமன்றம் மாநில அரசின் அதிகாரத்தில், தலையிடும் விதமாக உத்தரவிட முடியாது. தமிழகத்தில் கட்டாய தலைக்கவச உத்தரவை,

1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம்போல், அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள், குழந்தைகள் தலைக்கவசம் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள். 2 கிலோ எடை கொண்ட தலைக்கவசம் எப்படி குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியும்?

தலைக்கவசம் எப்படி இருக்கவேண்டும்? என்ற வடிவத்தை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருக்கும் பட்சத்தில், கட்டாய தலைக்கவச உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும்? இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

கட்டாய தலைக்கவச உத்தரவினால், தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் போடவேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. வண்டியை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும்.

விபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தில் மக்கள் பலியாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா?’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.