Show all

போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், நிறைவேறியது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

இலங்கையின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டனால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை, அந்த ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் இலங்கை ராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

மேலும், அப்போதைய காலக்கட்டத்தில் இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகிந்த ராஜபட்ச, ‘இலங்கை மண்ணில் ஒருபோதும் அன்னியர்களை நுழைய விடமாட்டோம்’ எனப் பகிரங்கமாகவே அறிவித்தார்.

இதனிடையே, இலங்கை அதிபர் தேர்தல் நெருங்கியபோது, ‘சர்வதேச அமைப்புகள் மூலம் போர்க் குற்றம் விசாரிக்கப்படும்’ என்ற வாக்குறுதியை ராஜபட்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் சிறீசேனா அறிவித்தார்.

இதனால், இலங்கைத் தமிழர்களின் பேராதரவுடன் அந்நாட்டு அதிபராக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் சிறீசேனா வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்.

ஆனால், அதிபராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட சிறீசேனா அரசு, போர்க் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையைதான் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனத் திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடந்த மாதம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய பன்னாட்டு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்; அவ்வாறு விசாரித்தால்தான், இந்தப் போரால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும்’ என அந்த அறிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.

எனினும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. மேலும், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்தப் போர்க் குற்ற விவகாரத்தில் நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என இலங்கை அரசு தெரிவித்தது.

அத்துடன், தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியா, சீனா போன்ற நாடுகளையும் இலங்கை அணுகி வந்தது.

ஐ.நா.வில் தீர்மானம்:

இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகளும் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா- பிரிட்டன் ஆகிய நாடுகள் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

இலங்கை ஆதரவால் ஆச்சரியம்:

ஐ.நா.வில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானதாகும். ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையும் ஆதரவளித்திருப்பது அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆணையர் விளக்கம்:

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு அதன் ஆணையர் ஸய்த் ராத் அல் உசேன் காணொலிக் காட்சி மூலம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதிமன்றத்தை அமைப்பதற்கு பரிந்துரைத்ததற்கான மூன்று காரணங்களை அவர் தெரிவித்தார்.

அவையாவன:

1. போர்க் குற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களைப் பாதுகாக்கவோ போதிய அமைப்புகள் இலங்கையில் இல்லை.

2. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றமானது சர்வதேச அளவிலானது; இதுகுறித்து விசாரிக்க உள்நாட்டு அமைப்பின் செயல் திட்டம் போதுமானதாக இல்லை.

3. இலங்கையில் செயல்படும் நீதித் துறைகளும், பாதுகாப்புத் துறைகளும் நம்பகத்தன்மை இல்லாத வகையில் சீர்குலைக்கப்பட்டுள்ளன என ùஸய்த் ராத் அல் உசேன் தெரிவித்தார்.

சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வரவேற்பு

இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு (அம்னெஸ்டி இண்டர்நேஷனல்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குநர் டேவிட் கிரிஃபித்ஸ் கூறியதாவது:

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகவும், உண்மையை நிலைநாட்டுவதற்காகவும் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்துகளும், இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளும் செயல்பாட்டுக்கு வருமானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும் என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.