Show all

பின்னிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பின்னிய மொழி சுமார் ஒரு கோடிக்குக் குறைவான மக்களால் பேசப்படுகின்றது. பின்னிய மொழி தேசிய மொழியாக உள்ள நாடு பின்லாந்து. பின்லாந்து நாட்டின் 92 விழுக்காட்டினர் பின்னிய மொழியைப் பேசுகின்றனர். 

வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு பின்லாந்து. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான ‘கலேவலா’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பின்னிய மொழிக்கு நமது நட்புறவு வணக்கம்.

யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த பின்னிய மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதும், ஆய்வு மேற்கொள்ள வேண்டியதுமாகும்.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 34 அகவையுள்ள சன்னா மரின் என்ற பெண் உலகின் இளம் அகவை தலைமைஅமைச்சராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி, பிற நான்கு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது என்பது பெருமைக்குரிய செய்தியாகும். 

சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆன்டி ரின்னே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் தலைமைஅமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் ஆட்சிக் காலத்தில் நடந்த அஞ்சல்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைச் சரிவரக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்தகிழமை அவர் தன் தலைமைஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து, அடுத்த தலைமைஅமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. பின்லாந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளில் இருந்தும் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் தலைமைஅமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டனர். அந்த ஐந்து பேருமே பெண்கள். ஒருவரைத் தவிர மீதமுள்ள நான்கு பேரும் 35 அகவைக்குக் குறைவானவர்கள்.

இந்நிலையில், நேற்று சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 34 அகவை சன்னா மரின் பின்லாந்தின் புதிய தலைமைஅமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தற்போது உலகிலேயே இளம்அகவை தலைமைஅமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சன்னா. மேலும் பின்லாந்தின் மூன்றாவது பெண் தலைமைஅமைச்சர் என்ற பெருமையும் இவரைச் சேர்ந்துள்ளது.
உலகில் 40 அகவைக்கும் கீழே உள்ள தலைமைஅமைச்சர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சன்னாவுக்கு முன்பு நியூசிலாந்தைச் சேர்ந்த 39 அகவை ஜசிண்டா ஆர்டர்ன் தான் உலகின் இளம்அகவை தலைமைஅமைச்சராக இருந்தார். சன்னா மரின் இந்த கிழமை பின்லாந்தின் புதிய தலைமைஅமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

உலகின் தலைசிறந்த பின்லாந்து கல்வி முறை குறித்து குறிப்பிட்டேயாக வேண்டும். எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்பதாக இருக்கிறது பின்லாந்து கல்விமுறை.

பின்லாந்து கல்வி முறை குறித்து பல நேர்மறையான கருத்துக்களை நாம் பெரிதும் கேட்டிருப்போம். ஆனாலும் இங்கு தெளிவு படுத்தியாக வேண்டும்.
பின்லாந்து பள்ளிகளில் தேர்வு நடக்கும். ஆனால், அது மாணவர்களை மதிப்பிடுவது போல இருக்காது. ஒரு மாணவரை இன்னொரு மாணவரோடு ஒப்பிடுவதற்காக இருக்காது. ஒரு மாணவருக்கு என்ன சிறப்பாக வருகிறது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் அறிந்து கொள்வதற்காகவே தேர்வுகள் நடத்தப்படும்.

அதே நேரம், ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மற்ற மாணவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பார்கள். 

பின்லாந்து கல்வி குறித்துப் பேசுபவர்கள் அது ஏதோ அதன் பாடத்திட்டத்தால் அந்நாடு சிறந்து விளங்குகிறது என்று எண்ணுகிறார்கள். இது தவறு. உண்மையில் பின்லாந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அந்நாட்டிற்கு உள்ள சமூக அக்கறைதான். அவர்களுக்கு கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்கிறது என்பதாகச் சொல்லப்படுகிறது.

பின்லாந்தில் குழந்தைகளுக்கான அன்றாடக்கவனிப்பு (டேகேர்) பள்ளி ஒரு அகவையிலேயே தொடங்கிவிடும். இதில் கட்டாயம் சேர்க்க வேண்டிய தேவை எல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். அதுபோல இது இலவசமும் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மானியமும் தருகிறது. 

அன்றாடக் கவனிப்புபள்ளி இது நம் ஊர் பால்வாடி போலத்தான். ஆனால், அதே நேரம் அங்குக் கற்பிக்கும் முறை மற்றும் கற்பிக்கப்படும் கருத்து நம்மூர் பால்வாடி போல அல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் இருக்கும். அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், சாலை விதிகளை மதிப்பது, தனித்துவத்தை இழக்காமல் சமூகத்துடன் கலந்திருப்பது ஆகியவை கற்பித்தலாக அல்லாமல் நடைமுறை பயிற்சியாக பயிற்றுவிக்கப்படுகிறது. 

முறையான கட்டாயமான பள்ளியானது ஆறு அகவையில்தான் அங்கு ஒரு குழந்தைக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வியும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கருத்;துக்கள், தயக்கமற்று இருப்பது குறிப்பாக தற்சார்பு வாழ்க்கையை கற்பிப்பதாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள், தனக்கு என்ன தேவை? தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள பின்லாந்து கல்வி முறை வழிவகை செய்கிறது.

பின்லாந்து மட்டும் அல்ல, ஐரோப்பா கல்வியில் சிறந்து விளங்க காரணம். அவர்கள் தாய்மொழி கல்விக்கு முதன்மைத்துவம் தருவதுதான் என்று தெரிவிக்கப் படுகிறது. தாய்மொழியில் கல்வி கிடைக்காததால்தான் பலர் பள்ளியைவிட்டு இடைநிற்கிறார்கள் என்கிறது யுனெஸ்கோ.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,361.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.