Show all

டேவிஸ் கோப்பை இரட்டையர் போட்டியில் இந்திய தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று தில்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதனால் செக் குடியரசு 2-1 என முன்னிலை வகிக்கிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே-ஆஃப் சுற்று புது தில்லியில் நேற்று தொடங்கியது. எலைட் உலக குரூப் சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணி, இப்போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செக் குடியரசு அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சமநிலையில் இருந்தன.

இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி, செக் குடியரசின் ராடெக் ஸ்டெபனெக் - ஆடம் பாவ்லாசெக் ஜோடியுடன் மோதியது.

வலிமையான செக் குடியரசு ஜோடி முன்பு இந்திய அணி மிகவும் தடுமாறியது. இறுதியில் 7-5, 6-2, 6-2 என நேர் செட்டில் ராடெக் ஸ்டெபனெக் - ஆடம் பாவ்லாசெக் ஜோடி, இந்திய ஜோடியைத் தோற்கடித்தது. ஆட்டம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நடந்தது.

இந்த வெற்றியினால் செக் குடியரசு, 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.