Show all

இலங்கை போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை கோரி திருமாவளவன் போராட்டம்.

இலங்கையில் அந்நாட்டு அரசின் போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி மதுரையில் போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தச் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, மதுவிலக்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி போன்ற மறைந்த தலைவர்களின் அஞ்சல் தலைகளை அச்சிடாமல் நிறுத்தும் மத்திய பாஜக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இது ஒரு வகையான மலிவு அரசியல் ஆகும்.

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறேம்.

ஆனால், இலங்கை அரசோ சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலப்படுத்த சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மதுரையில் வரும் 21ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.