Show all

இலங்கையில், தேவாலயங்கள் உணவகங்கள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு! 200க்கு மேற்பட்டோர் படுகாயம்

இன்று நிகழ்ந்த இலங்கை குண்டுவெடிப்பு, இதுவரை துப்பு துலக்க போதிய சான்றுகள் கிடைக்கப் பெறாமல் விசாரணைக் கட்டத்தில் இருந்து வருகிறது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெய்வீக வெள்ளிக் கிழமை விழா உலகம் முழுவதும் கிறித்துவர்களால் கொண்டாடப் பட்டு ஒருநாள் முழுதாக முடிந்த நிலையில், இன்று இலங்கையில் அடுத்தடுத்து தேவாலயங்களில் சிலவற்றிலும், அதேபோல் சில உணவகங்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. 
மொத்தம் இலங்கையில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி தேவாலயத்;தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 
அதேபோல் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 
கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. நான்குமே கொழும்பில் உள்ள மிக முதன்மையான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும். 
மேலும் சின்னமன் கிராண்ட் உணவகம், ஷங்கிரி லா உணவகங்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 200 நபருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். 
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கொழும்பில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் இயற்கை கொடையாக தப்பி பிழைத்துள்ளார் என்று தெரிகிறது. 
இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் கீச்சுவில் கூறியிருப்பதாவது, இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நான் தற்போதுதான் சின்னமன் கிராண்ட் உணவகத்தில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.