Show all

பெரியார் திடலில் 20அடி உயரப் பெரியார் முழு உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது.

தந்தை பெரியாரின் 137-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 20 அடி உயரம் கொண்ட பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது.

இந்தச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று காலை திறந்து வைத்தார்.

முன்னதாக தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் வீரமணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், செயல் தலைவர் அறிவுக்கரசு, பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச்செயலாளர் வி.அன்புராஜ், சட்டத்துறை செயலாளர் வீரசேகரன், பிரசார செயலாளர் அருள் மொழி, மகளிர் பாசறை டெய்சி மணியம்மை, பார்கவி, திருமகள், தங்கமணி, வனிதா, உமா, வக்கீல் வீரமரித்தினி உள்பட ஏராமானோர் பங்கேற்றனர்.

அங்கு கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அரசியல் சந்தையில் ஜாதி வெறி ஆட்டம் போடுகிறது. மதுரை அருகே நரபலி என செய்தி வருகிறது. நரபலி எதற்காக நடந்தது என்பது முக்கியமல்ல. ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்.

மக்களை மூட நம்பிக்கையில் இருந்து வெளிக் கொண்டு வர பெரியாரின் கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் அனைவரது கடமையாகும். இன்னும் தீண்டாமை கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை ஒழுங்குபடுத்த பெரியார் என்ற மாமருந்து தேவை.

உலகம் முழுவதும் பெரியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார்கள். அடுத்த ஆண்டு ஜூலை 3-வது வாரத்தில் ஜெர்மனியில் உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் பல தனியார் நிறுவனமாக மாறி வருவதால் இட ஒதுக்கீட்டை தோண்டி புதைக்கும் சதி அரங்கேறி வருகிறது.

எனவே தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி ஜனவரி மாதம் மாநாடு நடத்த உள்ளோம். இதில் ஒத்த கருத்துள்ள தலைவர்களை அழைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பங்கேற்று பெரியார் களஞ்சியம் தொகுதி 37 நூலை வெளியிட்டு பேசினார். இதில் கி.வீரமணி, அவ்வை நடராஜன், குமரேசன், டாக்டர் சொக்கலிங்கம், மயிலை நா.கிருஷ்ணன், ஒளி வண்ணன், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இதன் பிறகு மகளிர் கருத்தரங்கு நடைபெற்றது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.