Show all

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: நடால், சானியா மற்றும் லியாண்டர் பெயஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்று போட்டிநேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியும் ஸ்பெயினின் பிரபல வீரர் ரபேல் நடாலும் மோதினர்.

இந்த போட்டியில் நடால் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி முன்னணியில் இருந்த போதும் இறுதி கட்டத்தில் பாபியோ கடுமையாக ஆடி வெற்றி வாகை சூடினார். அவர்3-6 ,4-6, 6-4 6-3, 6-4செட் கணக்கில் வெற்றி பெற்றார். நான் முதல் இரு செட்டுகளை இழந்த போதும் பின்னர் நடந்த செட்டுகளில் மன உறுதியுடன் ஆடினேன். அதனால் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனது மன உறுதிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை கருது கிறேன் என்று பாபியோ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த போட்டியில் ஆடிய நடால் 8வது நிலை வீரராக இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி வந்த நடால் இந்த ஆண்டு எந்த ஒரு கிராண்ட் சிலாம் டென்னிசிலும் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவி இருக்கிறார்.

மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சானியா மிர்சா மற்றும் ப்ருனோ சோரஸ் ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா மற்றும் லுகாஸ் குபோட் ஜோடியை எதிர்கொண்டது.

65 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 3-6 மற்றும் 3-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வியை தழுவியது.  முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பயர் மற்றும் ஸ்பெயினின் பெர்னான்டோ வெர்டாஸ்கோ இணை, 5-7, 6-4 மற்றும் 3-6 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன்-சாம் குவர்ரே ஜோடியிடம் தோற்றது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.