Show all

குவியும் பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரப் பெண்! சீனத் தூதரக அதிகாரிகளைக் காப்பாற்றிய, துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுஹாய் அஜிஸ் தல்பூர் என்னும் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர், தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகளைக் காப்பாற்றியுள்ளார். 

சுஹாய் அஜிஸ் வழக்கம் போல பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் 3 பேர், துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு, சுஹாய் அஜிஸ் தலைமையில் இருந்த காவலர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.  

தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகண்ட அவரை பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவர் பெண் என்பதற்காகவும், தீவிரவாதிகளை வீழ்த்தினார் என்பதற்காகவும் மட்டும் அவர் கொண்டாடப் படவில்லை. 

அவர் வளர்ந்த விதமும், கடின உழைப்பால் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற வகைக்காகவும் அவரைப் பாராட்டி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக காவல்துறைப் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், தொடர்ந்து நேர்மையாகப் பணிபுரிந்து பாராட்டுகளைக் குவித்தவர்.

நான் சிறுவயதில் பள்ளியில் சேரும்போது பெண்களுக்கு எதற்கு படிப்பு என பல பேர் கிண்டல் செய்தனர். அதனால், நாங்கள் பெற்றோருடன் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தோம். எனக்கு மத ரீதியான கல்வியைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால், எனது தந்தை மறுத்துவிட்டார். என் தந்தையால் வெளி இடங்களுக்குச் சென்று என்னால் படிக்க முடிந்தது. என்னைப் பொருளாதார நிபுனராக ஆக்க வேண்டும் என தந்தை வணிகவியல் இளவல் பட்டப் படிப்பு படிக்கவைத்தார். ஆனால், சமூகத்துக்கு சேவைசெய்யும் மதிப்புள்ள பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, குடிமைப் பணித் தேர்வு எழுதினேன். கடும் சிரமத்துக்கு மத்தியில் தேர்வில் வெற்றிபெற்று காவல் பணியைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறும் இவருக்கு சிறு வயதில் கல்விக்காக நிறைய இடங்களுக்கு புலம்பெயர வேண்டிய நிர்பந்தம் இருந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.