Show all

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நடுவண் அரசின் வசம் இருக்கும் நேதாஜியின் ஆவணங்களும் வெளியிடப்படு

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி குறித்த மர்மங்கள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அவர் குறித்த மர்மங்களை விடுவிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், நேதாஜியின் ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச நாடுகளுடன் உள்ள உறவு பாதிக்கும் என்பதால் அவற்றை வெளியிட இயலாது என முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசும் கைவிரித்து விட்டன. இந்த சூழலில் மேற்கு வங்க அரசின் வசம் இருக்கும் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடப் போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதன் பேரில் அந்த ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தும் பணிகள் நடத்தப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று சுமார் 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 64 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இதற்கான டிவிடிக்கள் நேதாஜியின் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சூழலில் நடுவண் அரசின் வசம் இருக்கும் நேதாஜியின் ஆவணங்கள் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து நடுவண் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிடம் கேட்ட போது, சில ஆவணங்கள் ஏற்கனவே நடுவண் அரசால் வெளியிடப்பட்டு தேசிய ஆவண காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரகசிய ஆவணங்களையும் வெளியிடலாமா என நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.

ஆனால் இது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து நடுவண் அமைச்சர் பரதிபாய் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலின் போது, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் 29 ரகசிய ஆவணங்களும், பிரதமர் அலுவலகத்தில் 60 ஆவணங்களும் உள்ளன. ஆனால் இவற்றில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் பிரச்னைக்குரியவை. இவற்றை வெளியிடுவதால் இந்தியாவுடன் சர்வதேச நாடுகளுக்கு உள்ள உறவுகள் பாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.