Show all

சூரியசக்தி ஆய்வு கூடத்தை சரிசெய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரியசக்தி ஆய்வு கூடத்தை சரிசெய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பூமிக்கடியில் சூரியசக்தி ஆய்வு கூடம் அமைந்து உள்ளது. இங்குள்ள 5 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட சூரியசக்தி தொட்டியில் சிமெண்டால் அமைக்கப்பட்ட காற்று அழுத்தி கருவி (ஏர் கம்பிரசர்) பழுதடைந்து விட்டது.

 

இதை சரிசெய்வதற்காக அம்பத்தூரில் உள்ள தனியார் ரப்பர் நிறுவனத்தை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டனர். அதன்பேரில், அயப்பாக்கம் தேவி கருமாரி அம்மன் நகர் மகாலட்சுமி தெருவை சேர்ந்த தீபன் (அகவை 25) மற்றும் அவரது நண்பர் ரமேஷ் சங்கர் (26) ஆகியோர் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.

 

அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை சூரியசக்தி ஆய்வு கூட தொட்டிக்குள் இறங்கி பழுதான காற்று அழுத்தி கருவியைச் சரிசெய்தனர். பின்னர் தொட்டியின் உள்பக்கமாக ரப்பர் டியூப் ஒட்டும் பணியை மேற்கொண்டனர். பின்னர் சுவரை ஒட்டி அடிக்கப்பட உள்ள பெயிண்டில் சேர்ப்பதற்காக ‘டொலுவீன்’ எனும் கரைசலை வெளியே எடுத்தனர்.

 

அப்போது அந்த கரைசலில் இருந்து ஒரு வித வாயு வெளியானது. இதனால் தீபன் மற்றும் ரமேஷ் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். பின்னர் 2 பேரும் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்தனர்.

 

 

வெகுநேரம் தொழிலாளர்கள் வெளியே வராததால் பல்கலைக்கழக ஊழியர்கள் சூரியசக்தி ஆய்வு கூடத்தை சென்று பார்த்தனர். அங்கு 2 பேரும் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

தகவலறிந்து பல்கலைக்கழக ‘டீன்’ நாராயணசாமி மற்றும் பேராசிரியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு, 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஏற்கனவே 2 பேரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துயைpனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.