Show all

நீதித்துறை மட்டும் இன்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிரான செல்பி வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அந்த பொறுப்பில் இருந்து விலகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்து விட்டு வெளியே வந்த மோடி, பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்தை கையில் ஏந்தியபடி தனது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டார்.

ஆனால் மோடியின் இந்த செல்பி புகைப்படம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிசாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் நகர கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாலேயே அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி இந்த வழக்கில்  விசாரணை நடைபெற்றது.

அப்போது,  வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய  அரசு வழக்கறிஞர் திரிவேதி கால அவகாசம் கோரினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர். உத்வானி அக்டோபர் 6-ம் தேதிக்கு (நேற்று) விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க தாம் விரும்பவில்லை என்றும், வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் நீதிபதி உத்வானி அதிரடியாக அறிவித்தார். மோடிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென அந்தப் பொறுப்பில் இருந்து விலகிய சம்பவம் நீதித்துறை மட்டும் இன்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.