Show all

ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி டெல்லி வருகிறார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி டெல்லி வருகிறார்.

தனது இந்தியப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் அவர் சந்திக்கிறார்.

கடந்த ஜனவரியில் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அதேபோல ரணில் விக்ரமசிங்கேவும் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ரணில் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார். அவரது டெல்லி வருகையின்போது 13-வது சட்டத் திருத்தம் குறித்தும், இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

அப்போது இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட உள்ளது. மேலும் தலைமன்னாரையும் ராமேசுவரத் தையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மிக முக்கியமாக பிரதமர் ரணில் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே சீபா எனப்படும் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.