Show all

மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமையொன்று இறந்தது! அதுவே அந்த வகையினத்தில் கடைசி பெண் ஆமையாம்

உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை ஒன்று மூப்பு காரணமாக உயிரிழந்தது. அந்த இனத்தின் கடைசி பெண் ஆமை அதுவே யென்று சொல்லப் படுவதே இந்தச் செய்திக்கான முதன்மைத்துவம் ஆகும்.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆமைகள் மனிதன் அளவு காலம் வசிக்கும் உயிரினம் ஆகும். ஆமைகளோடு பழந்தமிழன் கடற்பயணத்திற்கு நீண்ட தொடர்புகள் உண்டு. 
ஐந்து வகை ஆமைகள் பழந்தமிழர் தொடர்பில் இருந்தன. அவை பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என்று பெயர் சுட்டப் பட்டுள்ளன.
ஆமைகள் பறவைகள் வலசை செல்வது போல கடலில் நீண்ட தூரம் பயணிக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆமைகள் கார்த்திகை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை கடலில் கரையொதுங்கி முட்டையிடுமாம்.
 பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் சில வகை ஆமைகளுக்கு உண்டு என்றும் சொல்லப் படுகிறது. யாங்சி என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த வகை ஆமைகள் பேரழிவைச் சந்தித்தன.
இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ள சூசோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். மற்ற 2 ஆமைகளும் வியட்நாமில் உள்ளன.
இந்த நிலையில், சீனாவின் சூசோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 அகவையான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. யாங்சி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்துவிட்டதால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில் அந்த ஆமை இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.