Show all

80 அகவை பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்! அந்த இரட்டையர்களின் 103 அகவை தாய் முன்னிலை

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இரட்டையர்கள் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 அகவை பிறந்த நாள் கொண்டாடும் இருவரும் தங்கள் 103 அகவை தாயுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மைனேவில் சன்னி ப்ரூக் என்னும் பகுதியில் டேவிட் மோசர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அவரின் இரட்டையாய் உடன் பிறந்த சகோதரியான வின்னி மோசரும் வசித்து வருகிறார். நேற்று அவர்களுக்கு 80-வது பிறந்தநாள். இருவரும் தன் தாய் ஹெலன் மோசரை வீட்டுக்கு வர வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். 

ஹெலன் மோசருக்கு அகவை 103. சில நேரம் தனியாக வசிப்பார். சில நேரம் தன் பிள்ளைகளின் வீட்டில் வசிப்பார். ஆனால், தன் பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் வந்து விடுவார். மகன், மகள், பேரன்கள் பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் என ஹெலனுக்கு மொத்தம் 79 வம்சாவளியினர் உள்ளனர். ஹெலன் தீவிர பேஸ்பால் ரசிகை. சோர்வடையாமல் தன்னை எப்போதும் வேலையாக வைத்துக்கொண்டிருப்பதே தன் ஆரோக்கியத்தின் கமுக்கம் என்கிறார் ஹெலன். 

தன் பிள்ளைகள் கொள்ளுப் பேரன் பேத்தி எடுத்த இந்த நிலையிலும் உரிமையோடு, தன் பேச்சைக் கேட்பதில்லை என பிள்ளைகளைச் செல்லமாக கடிந்துகொள்கிறார் ஹெலன். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.