Show all

பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி...

மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி மும்பையில் ஒட்டப் பட்டுள்ளதால் பெரும் சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.க சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக, பா.ஜ.க.வின் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த சிவசேனா கட்சியினர், வாரிய தலைவர் ஷசாங்க் மனோகர், பாக்.கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவர் ஷஹர்யார் கான் ஆகியோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால், இரு வாரியங்கள் இடையில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிப் போனது.

கடந்த வாரம், பாக்.முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத் கசூரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னியின் முகத்தில், சிவசேனா கட்சியினர், கருப்பு பெயின்ட் பூசியது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் இம்மாநிலத்தில், பா.ஜ.க.சிவசேனா இடையிலான உறவில், நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருகிறது. மேலும் சிவசேனாவின் செயல்பாடுகளால், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மறைந்த சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் குனிந்து வணங்கும் படங்களுடன் கூடிய பிரமாண்டச் சுவரெட்டியை , சிவசேனா கட்சியினர், மும்பையில், சிவசேனா கட்சி அலுவலகம் முன் ஒட்டினர். இந்தச் சுவரெட்டியால், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தச் சுவரெட்டியை ஒட்டிய ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவை மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ண வீகே பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்,

சமீப நாட்களில் பாகிஸ்தான் பிரபலங்களை இலக்காக கொண்டு செயல்படும் காவி கட்சி,

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபொழுது,

பாகிஸ்தான் பிரதமர் முன் தனது கட்சி எம்.பி. பதவி பிரமாணம் செய்துகொள்ள அனுமதித்தது ஏன்?

சிவசேனா, அந்தச் சுவரெட்டியைத் தனது இருப்பை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தியுள்ளது.

தேசியவாத தன்மையுடன் அக்கட்சி இருக்கும் எனில், சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் அனந்த் கீதே ஏன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன் நடுவண் அமைச்சர் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டார்? என்றார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.