Show all

பாதம் கழுவும் சடங்கில் இந்து முஸ்லீம் பாதங்களையும் கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர்

புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் இந்து பெண், முஸ்லீம் அகதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக தவகாலத்தை அனுசரித்து வருகின்றனர். தவகாலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித வாரத்தில் வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்கள் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி மற்றும் உயிர்ப்பு ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது.

இதில் புனித வியாழன் அன்று, இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு பாதம் கழுவிய நிகழச்சியை நினைவு கூறும் விதமாக,  உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்கள்,  12 பேரின் பாதங்களை கழுவி, முத்தமிடுவது வழக்கம்.

இதுவரை கத்தோலிக்க கிறிஸ்தவ போப்பாண்டவர்கள் யாரும்,  ரோம் நகரத்திற்கு வெளியே புனித வார சடங்குகளை நிறைவேற்றியது கிடையாது. மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை சார்ந்தவர்களின் பாதங்களை மட்டுமே கழுவுவர். ஆனால் போப் பிரான்சிஸ் மிகவும் புதுமையாக,  பிற மதத்தை சார்ந்தவர்களின் பாதங்களை கழுவியுள்ளார். இது உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டும் புனித வியாழன் சடங்குகள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நடைபெற்றன. இதில் போப் ஆண்டவரின் தலைமையில் நடைபெற்ற சடங்கில்,  போப் பிரான்சிஸ் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.

இதில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் மாலியை சார்ந்த இஸ்லாமிய அகதிகள், இந்தியாவை சார்ந்த இந்து மற்றும் நைஜீரியாவைச் சார்ந்த கருப்பின பெண்கள் ஆகியோர் அடங்குவர்.  அகதிகள் முகாமிற்கு சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ்,  அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் ஈஸ்டர் முட்டைகள் மற்றும் கால்பந்துகளை பரிசளித்தார். பணமும் நன்கொடையாக வழங்கினார்

அதன் பின் நடந்த நிகழ்ச்சியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசும்போது, முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள், ஆர்த்தோ டெக்ஸ், இவாஞ்சலிசல் என பல கிறிஸ்தவர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் சகோதரர்கள், கடவுளின் குழந்தைகள். அனைவரும் அமைதி, சமாதானம் மற்றும் ஒற்றுமையுடன் வாழவே அவர் விரும்புகிறார்.  பிரசல்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ள தாக்குதல், ரத்த வெறி பிடித்தவர்கள் செய்யும், போருக்கான சமிக்ஞை என்றார்.

போப் ஆண்டவர் இந்து, இஸ்லாமியர்களின் பாதங்களை புனித வியாழன் திருப்பலியின்போது கழுவி, முத்தம் கொடுத்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.