Show all

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது

கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை கண்டித்தும், அதன் கொள்கைகளை விமர்சித்தும், இருநாடுகளுக்கும் எல்லை பகுதியில், வட கொரியாவை நோக்கி, ஏராளமான ஒலிபெருக்கிகள் வைத்து, தென் கொரியா பிரசாரம் செய்தது.இதனால் ஆத்திரம் அடைந்த, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், ஒலிபெருக்கிகளை, 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்; இல்லையேல், தென் கொரியா மீது தாக்குதல் நடத்தப்படும்; என்றார். ஆனால், ஒலிபெருக்கிகளை அகற்ற, தென் கொரியா மறுத்து விட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், எல்லையில் ராணுவத்தை குவித்த வட கொரியா, எந்த நேரத்திலும் போருக்கு தயாராக இருக்குமாறு படைகளுக்கு உத்தரவிட்டது. அதுபோல், தென் கொரியாவும் தன் எல்லையில், ராணுவத்தை குவித்தது. பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் வகையில், தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா, தென் கொரிய வீரர்களுடன் இணைந்து, போலி குண்டுகளை வீசி, போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்தது.இந்நிலையில், அதிரடி திருப்பமாக, கெடு முடிய சில மணி நேரங்கள் இருந்த நிலையில், இரு நாட்டு உயர் அதிகாரிகளும், பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முன்வந்தனர். அதன்படி, எல்லையோர கிராமத்தில், நேற்று, பேச்சு நடைபெற்றது.இதையடுத்து, இரு நாடுகளிடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே, 1950ல் துவங்கிய போர், 1953ல் முடிவடைந்தது. இரு நாடுகளும் போரை கைவிட்ட போதிலும், அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை. இதனால், அவ்வப்போது போர் முஸ்தீபுகளில் இருநாடுகளும் இறங்குவது வாடிக்கையாக உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.