Show all

சன் குழுமச் சொத்தை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

இ ந்தியாவில் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சன் குழுமத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் சொந்தமான 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சன் குழுமத்தின் சொத்துக்கள் உட்பட, மாறன் சகோதரர்களின் 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு தேவையான உத்தரவை, அமலாக்கப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான குழு முன்பாக இன்று வௌ;ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, சன் குழுமத்தின் சொத்துக்கள் உள்ளிட்ட, மாறன் சகோதரர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தடை உத்தரவு என்பது சொத்துக்களை உடனடியாக முழுமையாக முடக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தான் என்றும், ஆனால், இதன்மூலம் சொத்துக்களை அமலாக்கப் பிரிவின் வழக்கு நடவடிக்கையுடன் இணைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எந்தவிதமான தடையும் கிடையாது என்றும் நீதிபதிகளின் இந்த அமர்வு தெளிவுபடுத்தியது. வழக்கமாக, அமலாக்கப் பிரிவின் சொத்துக்களை முடக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் 180 நாட்களில் முழுமை பெறும். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சொத்துக்களை முடக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், அமலக்கப் பிரிவின் உத்தரவு 180 நாட்களை கடந்தும் காலாவதியாகாது எனவும் நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான விவகாரத்தில், சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்ற வழக்கிலேயே அமலாக்கப் பிரிவு இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறுகிறது. அமலாக்கப் பிரிவால் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துகள் எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்து தான், சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டுகிறார்.

மேலும், கடந்த 2007 மார்ச் மாதத்திலேயே தான் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகவும், 2007 ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் டைரக்ட் டிவியிலும் சவுத் ஏஷியா எஃப்எம்மிலும் முதலீடு செய்ய ஆரம்பித்தது என்றும், ஆனால் அதற்கு முன்பாக வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை இப்போது முடக்க முன்வந்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தயாநிதி மாறன் கூறி வருகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.