Show all

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார்

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இரு நாள் சுற்றுப்பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு இன்று சென்றார். இன்று காலை 9.30 மணியளவில் லக்னோ விமான நிலையம் சென்றடைந்த அவர், தனது தொகுதியில் உள்ள புரேலாதி கிராமத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே நரேந்திர மோடி அரசு பணியாற்றி வருகிறது. தனது சட்டத்தின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாயிகளின் நிலங்களை பறிக்க முற்படுகிறது. ஆனால், இதை காங்கிரஸ் தடுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.என்று தெரிவித்தார்.

அதேவேளையில், மத்தியிலும், மாநிலத்திலும்( உ.பி) ஆட்சியில் இல்லாததால் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று ராகுல் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது உங்களின் பணி என்றும் நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் கட்சியின் கைகளில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று மக்களுக்கு தெரியப்படுத்த காங்கிரஸ் எம்.பிக்களின் 44 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை பலவீனமடையச்செய்யும் நோக்கில் ராகுல் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி கூடிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒட்டுமொத்தமாக முடங்கியது. இதனால், சரக்கு சேவை வரி மசோதா, உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறவில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு அமேதிக்கு முதல் முறையாக ராகுல் காந்தி சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.