Show all

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களைவிண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா.

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா. வேறு எந்த நாடும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.

விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18-வது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.மாவட்டத் தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலைவகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்தளியத் தொடக்கவுரையாற்றினார். திரைப்பட இயக்குநர் பாரதிகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் கருத்துரையாற்றிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உந்துமை வளாகத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் இங்கர்சால் பேசியபோது கூறியதாவது:

எல்லோரும் சமம் என்ற எண்ணம் இல்லாமைதான் அறிவியலை தோற்கடிக்கிறது. அறிவியல் என்பது கத்தி போன்றது. மருத்துவர் கையில் அது கிடைத்தால் உயிர்களை அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைக்கும். சமூக விரோதி கையில் கிடைத்தால் உயிரை பறிக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவதைப் பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு இந்தியா அனுப்பியது.

இது மிகப்பெரிய சாதனை. வேறு எந்த நாடும் இச்சாதனையை இதுவரை செய்யவில்லை. பிஎஸ்எல்வி-28 ராக்கெட் மூலம் பிரிட்டன் நாட்டு 5 செயற்கைக்கோள்கள் கடந்த வாரம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. வளர்ந்த நாடான பிரிட்டன் இந்தியாவை நாடிவருகிறது என்பது பெருமைக்குரியது. கடந்த சில ஆண்டுகளில் 30 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.ஆனால், ஆராய்ச்சிகளாலும், தொழில் நுட்பங்களாலும், தகவல் தொடர்பு வளர்ச்சியாலும் மக்கள் எதிர்மறையான விளைவுகளையே சந்திக்கின்றனர். தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள்கள் மூலம் ஒரு நாட்டில் நடத்தப்படும் பாடங்களையோ கருத்தரங்குகளையோ மற்றொரு நாட்டில் உள்ள மாணவர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கல்விக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், வணிக நோக்கில் விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை மக்கள் பார்க்கின்றனர். இதனால், அக்கண்டுபிடிப்புக்கான பயனே இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ள ஆட்சியாளர்களே காரணம்.நம்நாட்டில் வளங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவை முறையாக பண்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வணிகமயமாக்கப்பட்டு வருகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். அறிவியல் என்பது உண்மையைத் தேடுதல், ஆனால், மக்களுக்குள் சமநிலை இல்லாத இடத்தில் எந்த தொழில்நுட்பமும் பயனைக்கொடுக்காது என்றார் அவர்.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஏராளமான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1962 முதல் 1982 வரை அதற்கு திட்ட இயக்குநராகச் செயல்பட்டவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அவரது இறப்பு நாட்டுக்கு பெரும் இழப்பு. சந்திராயன்-1 ஐத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் நிலவில் ரோவர் போன்ற நகரும் ரோபோவை இறங்கி ஆய்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.