Show all

போர் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம் பெறவில்லை

போர் குற்றவாளிகள் பட்டியல் எதிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல் அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

 கடந்த 1945-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் மரணம் தொடர்பாக நீண்டகாலமாக மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேதாஜி குறித்த தகவல்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை வெளியிட நடுவண் அரசு நடவடிக்கை எடுத்தது.

 அதன்படி நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி கடந்த ஜனவரி 23-ஆம் தேதி 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 50 ஆவணங்களும், ஏப்ரல் மாதம் மேலும் 25 ஆவணங்களும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன.

 இந்நிலையில், நடுவண் கலாசாரத் துறைச் செயலாளர் என்.கே.சின்ஹா, நேதாஜி தொடர்பான 25 ரகசிய ஆவணங்களை இணையதளத்தில் வௌ;ளிக்கிழமை வெளியிட்டார். அதில் 5 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தவை. 4 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தாலும், 16 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத்தாலும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த ஆவணங்கள் 1968 ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை.

 நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது இப்போது வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.