Show all

‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவர்களே 9ஆண்டுகளாக சாதனை

இரு இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுவர்கள், புகழ்பெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வென்றுள்ளனர். இவர்களில் ஒருவர், மிக இளவயதில் இப்போட்டியில் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

இருவருக்கும் கோப்பையுடன் தலா 45,000 டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படும்.

 

ஆங்கில வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை சரியாகச் சொல்லும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி உலகப் புகழ்பெற்றது.

இப்போட்டியில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி சிறுவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

 

தற்போது நடந்த போட்டியில்,

இந்திய வம்சாவளி சிறுவர்கள் ஜெய்ராம் ஜெகதீஷ் ஹத்வார் (13),

நிஹார் சாய்ரெட்டி ஜங்கா (11)

இருவரும் இறுதிப்போட்டியில் சமநிலை வகித்ததால், இருவரும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 

தவிர, போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற 10 பேரில் 7 பேர் இந்தியர்கள். நடப்பாண்டு இப்போட்டியில் வென்றுள்ள நிஹார் சாய்ரெட்டி ஜங்கா (11) இப்போட்டியில் வென்றவர்களிலேயே மிக இளம் வயதுடையவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

 

நிஹார் டெக்சாஸில் 5-ம் வகுப்பும், ஜெய்ராம் நியூயார்க்கில் 7-ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

 

கோப்பையை வென்ற நிஹார் பேசும்போது,

“எனக்கு பேச்சே வரவில்லை. எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நான் 5-வதுதான் படிக்கிறேன். இது எல்லாவற்றுக்கும் என் அம்மாதான் காரணம்” என்றார்.

 

கலிபோர்னியாவைச் சேர்ந்த 8-வது படிக்கும் சினேகா கணேஷ் குமார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார்.

 

ருத்விக் கந்தாஸ்ரீ, ஸ்ரீநிகேத்வொகோடி, ஜுசன் பலுரு, ஸ்மிருதி உபாத்யாயுலா ஆகிய இந்திய சிறுவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்ற 10 பேர்களில் இடம்பிடித்தனர்.

 

ஜெய்ராம் தனது வெற்றிக்கு அண்ணன் ஸ்ரீராம்தான் காரணம் எனக் கூறியுள்ளார். ஸ்ரீராம் 2014-ம் ஆண்டு இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

இப்போட்டி கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் 13 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பட்டத்தை வென்று வருகின்றனர்.

 

இரண்டு பேர் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொள்வது தொடர்ந்து மூன்றாவது முறையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.