Show all

சயன், மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு! சிறையில் அடைக்க மறுத்த அறங்கூற்றுவர் ;முகாந்திரம் இல்லாத கைது

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைத் தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர். அவர்கள் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் அறங்கூற்று மன்றத்தில் சயன், மனோஜை அணியப்படுத்தினர்.

அப்போது காவல்துறையினரிடம் அறங்கூற்றுவர் சரமாரி கேள்வி எழுப்பினார். காவல்துறையினர் கோரிக்கை படி இருவரையும் சிறையில் அடைக்க மறுத்த அறங்கூற்றுவர் சரிதா, சயன், மனோஜ் பேட்டியால் எங்குக் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது. சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா எனக் கேள்வி எழுப்பியதுடன், வழக்குப்பதிவு மீதான சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே சயான், மனோஜை காவலில்அனுப்ப முடியும் எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தொடர்ந்து நள்ளிரவு சைதாப்பேட்டையில் அறங்கூற்றுவர் சரிதா வீட்டில் இருவரும் மீண்டும் அணியப் படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கறிஞருடன் இருவரும் வரும் வெள்ளிக் கிழமை அணியமாக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சயன், மனோஜ் இருவரையும் காவல்துறையினர் விடுவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.