Show all

பட்டாசு வெடித்த சிறுவனின் தந்தை கைது! பக்கத்து வீட்டுக்காரர் புகாரின் பேரில்

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லி காசிப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தான். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவனை பட்டாசுகளை தவிர்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்காமல் சிறுவன் பட்டாசுகளை தொடர்ந்து வெடித்துள்ளான். இதனால் பக்கத்து வீட்டு நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் சிறுவனிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அவனுக்கு பட்டாசுகளை வாங்கி கொடுத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையை கைது செய்தனர்.

இதனிடையே, டெல்லியில் சர்தார் பஜார், சுப்சி மண்டி, புராரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த போது சுமார் 650 கிலோ எடையுள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் டெல்லியில் மாசுகட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் உச்சஅறங்கூற்றுமன்றம் தற்காலிகமாக இடைக்கால தடை விதித்துள்ளது. அதை மீறியதாக, கடந்த 2 நாட்களில் சுமார் 80 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தைக்கு அதிகபட்ச அபராதத்தொகையும் அல்லது 6 மாத சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,962.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.