Show all

மக்கள் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் ஜாக்டோ-ஜியோ! எதிர்கட்சி தலைவரே போராட்டம் வேண்டாம் எனுமளவிற்கு தமிழகம் பாதிப்பில்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் 'புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நியாயமான நடைமுறைக்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும், அப்போராட்டங்களை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவோ கண்டுகொள்ளவோ செய்யாமல் முற்றிலும் அலட்சியப்படுத்தியதின் விளைவாக, வருகின்ற செவ்வாய்க் கிழமையிலிருந்து காலவரையறையற்றப் போராட்டத்தை நடத்தப் போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்திருக்கிறார்கள். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உரிமையின் அடிப்படையில் வழக்கமாக வாங்கி வரும்  சம்பளத்தையே கேலி பேசும் முதல்வர் தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சியில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

பெண் அரசு ஊழியர்கள் என்றுகூடப்  பார்க்காமல் கைது செய்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பயணிக்கும் பேருந்துகளுக்குள் புகுந்து அடாவடியாக திடீர் கைது, அறவழி போராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல்  முள்வேலி அமைத்து தடுப்பது போன்ற அராஜகச் செயல்களில் அதிமுக அரசு ஈடுபட்டு வருகிறது. 

நிர்வாகத்  திறமை இல்லாத ஆட்சியில் அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று மட்டுமல்ல, அனைத்துத்  தரப்பு மக்களுமே தங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் அன்றாடம் போராடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

ஆகவே ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் அறவழிப் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியதிருப்பதால், வருகிற செவ்வாய்க் கிழமை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக அரசு யாருடையை கோரிக்கைகளையும் அழைத்துப் பேசி நிறைவேற்றும் அரசு அல்ல. போராடினாலும் தமிழக அரசு திருந்தப் போவதில்லை. அடிப்படையிலேயே தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான அரசு. 

ஆகவே எத்தனை முறை போராடினாலும் எந்தவகைப் போராட்டமானாலும் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைத்திடப் போவதில்லை; மாறாக மனித சக்தி விரயம்தான் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் ஆட்சி மாற்றம் ஒன்றே ஜனநாயக வழி என்பதை மனதில் நிறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சூழ்நிலைகளின் பின்னணியில் நான் விடுக்கும் இந்த அன்பான வேண்டுகோளை கனிவுடன் ஆராய்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில்,  திமுக  ஆட்சி அமைந்திடும் நல்வாய்ப்பு செயலாக்கம் பெற்றதும், இதுமாதிரி எவ்வித போராட்டங்களும் நடத்தாமலேயே ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகள் குறித்துக் கலந்து பேசி நிறைவேற்றித் தரப்படும் என்பதையும் திமுக சார்பில் உறுதியளிக்கிறேன்' என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.