Show all

துகில்கடை உரிமையாளர் கைதானார்! வீடுகள் மீது தடுப்புச்சுவர் விழுந்து 17 பேர் பலியான சோகநிகழ்விற்கு காரணமானவர்.

17 பேர் பலியான சோகநிகழ்விற்கு காரணமான- துகில்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனால் சிவசுப்பிரமணியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சிவசுப்பிரமணியனை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரிய துகில் விற்பனைக்கடை நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தனது வீட்டை சுற்றி சுமார் 15 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் கட்டி உள்ளார். இதன் அருகில் ஏராளமான ஓட்டு வீடுகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட அந்தத் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் இருந்து வீடுகள் மீது விழுந்தன. இதில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு பரிதாபமாக பலியனார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 17 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கு 15 அடி உயர தடுப்பு சுவர்தான் முதன்மைக் காரணம். எனவே அதை கட்டிய துகில்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். அதுவரை பலியானவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர். 

இந்த நிலையில் சிவசுப்பிரமணியன் மீது, கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையறிந்த சிவசுப்பிரமணியன் தலைமறைவானார். மேலும் துகில்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனால் சிவசுப்பிரமணியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சிவசுப்பிரமணியனை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் மதுக்கரை அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டு கோவை நடுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.