Show all

தமிழக சட்டமன்றத்தின் நேற்றைய பேசுபொருளானது டிக் டாக் செயலி!

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக மாறியுள்ள டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் செயலி இன்றைய இளைஞர்கள் நடுவே பெரும் சவாலாக உள்ளது. இந்தச் செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதைத்தலைவன் கதைத்தலைவியாக நினைத்து திரைப்பட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் ஏற்றார் போல் நடிப்பது, பாடுவது போன்றவற்றைக் காணொளியாக பதிவு செய்கின்றனர். பின்னர் அதனைச் சமூக வலைதளங்களிலும் பதிவிடுகின்றனர்.

இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. குறிப்பாக, பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களையும், காட்சிகளையும் அதிகளவு பதிவிடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. 

இது ஒருபுறம் இருக்கப் பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அண்மையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல் நிலைப் பள்ளியில், ஆசிரியரைப் பாடம் எடுக்க விடாமல் கேலி, கிண்டல் செய்து டிக் டாக் காணொளி வெளியிட்ட ஆறு மாணவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அண்மையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் புகைப்படங்களை திரட்டி இளைஞர்கள், ஆடுகளம் பாடலை பின் பதிவிட்டு, அதனை இணையத்தில் வெளியிட்டனர். இந்தக் காணொளி மிகுதியாக பகிரப்பட்டதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சேலம் குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

எனவே பெற்றோர்கள் உட்பட பலரும் இந்தச் செயலிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். டிக் டாக் செயலியை கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அதனைத் தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில் இன்று சட்ட பேரவையில், மஜக உறுப்பினர் தமீமுன் அன்சாரி டிக் டாக் செயலி தொடர்பாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து அவர், டிக் டாக் செயலி கலாச்சாரத்திற்குச் சீரழிவு ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும். மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் என அனைவராலும் 'டிக் டாக்' அதிகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆபாசத்தின் வடிவமாக காணொளிகள் பதிவு செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.

மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களைத் தொடர்பு கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும் என்றார்.

ப்ளூவேல் விளையாட்டு பலரையும் பாதித்தபோது அதுகுறித்துப் பேசி அந்தச் சர்வர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து அதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதுபோன்று நடுவண் அரசு உதவியுடன் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விளக்கமளித்துள்ளார் அமைச்சர் மணிகண்டன்.

இதுகுறித்து கணினி ஆய்வாளர் அப்துல்லா கூறுகையில், டிக் டாக் செயலியை முழுமையாகத் தடை செய்ய முடியாது. இணையம் சர்வீஸ் ப்ரொவைடர் மூலமாக, டிக் டாக் சம்பந்தப்பட்ட டேக் லைன் அல்லது ஐபி-யை வேண்டுமானால் தடை செய்யலாம் என்றார்.

எடுத்துக்காட்டாக தமிழ் ராக்கர்ஸை நீதிமன்றம் தடை செய்தாலும், அதில் வெளியிடப்படும் படங்கள் மக்களால் பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், டிக் டாக்கை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றால் , அந்தக் காணொளிகள் அனைத்தையும் யூடியூப் ஹோஸ்டிங் ப்ரொவைடரில் இருந்து நீக்கினால் மட்டுமே அதைத் தடை செய்ய முடியும். எனவே டிக் டாக்கை முழுமையாகத் தடை செய்வதற்குச் சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கை என்பது ஒரு முயற்சிதானே தவிர அதை, யூடியூப் அல்லது டிக் டாக் நிறுவனமோ நீக்காமல், இதனை முழுமையாகத் தடை செய்ய முடியாது. அப்படி தடை செய்தாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கில் சமூக வலைதளங்களில் பரவிக் கிடக்கும் காணொளிகளை எப்படி நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. அதில் டிக் டாக் செயலியால் இளம் தலைமுறையினர் நடுவே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை உடனே தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக் டாக்கை தடை செய்தால் முதலில் மகிழ்ச்சியடைவது நானாகத் தான் இருப்பேன் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, எங்களைப் போன்றவர்களைத் தான் அதிகம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்தச் செயலிக்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும் என்றார்.

தமிழிசை எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து கொஞ்சம் யோசிக்க வேண்டுமே என்கின்றனர் டிக்டாக் செயலி குறித்து ஏதும் அறியாதவர்கள். 

தமிழிசையை ரொம்பத் தெரியுமோ என்று கேட்டால்: தமிழிசையின் அலம்பல்தான் நாடே நாறிப்போய் கிடக்கிறதே என்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.