Show all

அப்பாடா! கொடநாடு கொலை, கொள்ளை தற்கொலைகள், விபத்து மரணங்கள், எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு, மறுப்பு, தினகரன்கோரிக்கை

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் கொடநாடு மனைச்சொத்தில் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான மாளிகை உள்ளது.

இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, மாளிகைக்குள் புகுந்து செயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என காவல்துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது.

இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட செயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். 

மற்றொரு குற்றவாளியாகச் சொல்லப்பட்ட கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு மனைச்சொத்தின் கண்காணிப்பு படக்கருவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள காணொளி வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான காணொளி ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர். என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் கொடநாடு காணொளி தொடர்பாக அறங்கூற்று மன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.