Show all

பெண் கடத்தல் வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞரைப் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை அருகேயுள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் டெய்ஸிராணி. மகளிர் குழு மற்றும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூன் 4) டெய்ஸிராணியை காரில் வந்த சிலர் கடத்திச் சென்றதாகவும், அவர்கள் ரூ.2 லட்சம் கேட்பதாகவும் தேவதாஸ் அளித்த புகாரின் பேரில் யானைமலை ஒத்தக்கடை காவல்துறையினர் ஜான்சி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, டெய்ஸிராணியை ஐராவதநல்லூரைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்றதாக தெரியவந்ததையடுத்து அவரை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது மதுரை அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் இருந்த பவுன்பாண்டி (33) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து டெய்ஸிராணியை கடத்த பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெய்ஸிராணியும் மீட்கப்பட்டார்.

கைதான பவுன்பாண்டி ஐராவதநல்லூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் எனவும், வழக்குரைஞர் எனவும் காவல்துறையினர் கூறினர்.

அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் கடத்தல் வழக்கில் வழக்குரைஞர் தவிர, மேலும் 4 பேரைத் தேடி வருவதாகப் காவல்துறையினர் கூறினர்.

இவ்வழக்கில் விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி பாராட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.