Show all

செல்பேசி மூலம் மின்சார தொடர்வண்டி பயணச்சீட்டு

செல்பேசி மூலம் மின்சார தொடர்வண்டி பயணச்சீட்டு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஜூலை 12-ம் தேதி வரை 14 தொடர்வண்டி நிலையங்களில் நடக்க உள்ளது.

 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் இயக்கப் படும் மின்சார தொடர்வண்டிகளில் செல் பேசி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து பயணம் செய்யும் வசதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் எழும்பூர் தாம்பரம் வழித் தடத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இந்த வசதி படிப்படியாக மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

 

இணையதளம் வசதியுள்ள ஆண்ட்ராய்டு அல்லது விண் டோஸ் செல்பேசி மூலம் இந்த வசதியைப் பெற முடியும். தொடர்வண்டி நிலையத்தை சுற்றி உள்ள 5 கி.மீ. தூரத்துக்குள் வரும்போது, மின்சார பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

 

கடந்த 2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 281 பேரும், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 696 பேரும் செல்பேசி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த பயணச்சீட்டில் இது வெறும் 0.52 விழுக்காடு ஆகும். இந்த எண்ணிக்கையை 30 விழுக்காடாக  உயர்த்த தெற்கு ரயில்வே பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

 

அதன்படி, இதற்கான விழிப்புணர்வு முகாம் இன்று வில்லிவாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் தொடங்குகிறது. பின்னர், பெரம்பூர், ஆவடி, வேளச்சேரி, திருவான்மியூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளுர், சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் கடற்கரை, தரமணி, தாம்பரம், மாம்பலம், குரோம்பேட்டை, பூங்கா என மொத்தம் 14 தொடர்வண்டி நிலையங்களில் நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, பயணச்சீட்டு முன்பதிவுக்கான செயலி இலவசமாக பதிவிறக்கம் செய்து தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.