Show all

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது

தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது என நடுவண் தொழில், வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கருத்து பரப்புதல் செய்வதற்காக நேற்று சென்னைக்கு வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

தமிழக மக்கள் யாரை விரும்புகிறார்களே அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை இருந்தது. தமிழகத்திலும் அது எதிரொலித்தது.

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் என்பது முதல்வரை தேர்வு செய்வதற்கான தேர்தல். எனவே, இந்தத் தேர்தலில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. தேர்தல் முடிந்ததும் நடுவண் அரசின் திட்டங்கள் முழுவீச்சில் முடிக்கப்படும்.

என்றார்

சென்னை சைதாப்பேட்டை தொகுதி பாஜக வேட்பாளர் காளிதாஸை ஆதரித்து சைதாப் பேட்டை ஜோன்ஸ் சாலையில் திறந்த ஜீப்பில் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்து பேசியதாவது:

 

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதனால் பல்வேறு துறைகளில் தமிழகம் பின்தங்கியுள்ளது. எனவே, மக்கள் அதிமுக, திமுகவுக்கு மாற்று வேண்டும் என விரும்புகின்றனர்.

 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. மத்தியில் இருப்பதைப்போல மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்தால் தமிழகம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். எனவே தேசிய கட்சியான பாஜகவுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.