Show all

தங்கம் போல் தண்ணீர் விலை! வருமானத்தின் பெரும்பகுதி தண்ணீருக்கே!! சோகத்தில் மூழ்குகிறது சென்னை.

கால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகிறது தண்ணீர்; கண்டுகொள்ளாத அரசு. வருமானத்தின் பெரும்பகுதி தண்ணீருக்கே!! சோகத்தில் புலம்பித் தவிக்கும் சென்னை மக்கள்.

32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலிக்குடங்களுடன் தெருதெருவாய் அலையும் காட்சிகள் சென்னையின் இயல்பாகி வருகிறது.

இந்த நிலையில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன சென்னையில். 30 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் வழங்கி வந்த செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்டவை வறண்டுவிட்டன. குளிக்காமலும் துணிகளை துவைக்காமல் கிழமைக்கணக்கில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எத்தனை விலை கொடுத்தாவது தண்ணீரை வாங்க வேண்டியுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீரின் விலை ரூ .6000 ஆக விற்கப்படுகிறது. இதே சுத்திகரிக்கப்படாத குடிநீரின் விலை 24 ஆயிரம் லிட்டருக்கு ரூ 3000 விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,161 ரூபாயாக உள்ளது. எனவே 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கும் விலையில் கால் பவுன் நகை வாங்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் சென்னையில்தான் இருக்கின்றன. இந்த தண்ணீர் தட்டுப் பாட்டை போக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசுக்காகதாம், வணிகம்தாம் என்றாலும் கூட தனியார் வாகனங்கள் தாம் இரவு பகலாக, 50கிமீ 100 கிமீ என்று அலைந்து திரிந்து தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க சேவையாற்றி வருகின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,184.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.