Show all

மனைவியின் முட்டாள்தனமான தற்கொலைக்கு கணவனைக் குற்றம் சுமத்த முடியாது

மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனைக் குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 26.12.2004 அன்று தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

சிகிச்சையின்போது அவர் வட்டாட்சியரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், தன் மீது கணவர் அய்யப்பன் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தொடக்கத்தில் அய்யப்பன் மீது மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி இறந்த பின்பு அய்யப்பன் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அய்யப்பன் தனது மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2006-ம் ஆண்டு உத்தரவிட்டது.

 

இந்தத் தண்டனையை எதிர்த்து அய்யப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார்.

 

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

எந்தவித தூண்டுதலும் இல்லாமல் சில நேரங்களில் சிலர் தற்கொலை முடிவை எடுத்துக் கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு, இவர் தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று கூற முடியாது.

 

தற்கொலை முடிவுக்கு வருபவர்கள் கோழைகள். மன உறுதியில்லாதவர்கள். அது போன்ற மனநிலையில் எடுக்கும் முடிவுக்கு ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் மனுதாரரின் மனைவி முட்டாள்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்காக மனுதாரரை குற்றம் சாட்ட முடியாது.

 

இந்த வழக்கை பொறுத்தமட்டில் மனுதாரர் மனைவியின் தற்கொலைக்கு மனுதாரர் தான் காரணம் என்று கூறி விருதுநகர் நீதிமன்றம் தானாகவே முடிவுக்கு வந்துள்ளது. கீழ்நீதிமன்ற விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சிகள் இருவர், மனுதாரரின் மனைவி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தபோது மனுதாரர் வீட்டுக்கு வெளியே தான் நின்று கொண்டிருந்தார் என்று கூறி உள்ளனர்.

 

இதை பார்க்கும்போது மனுதாரரின் மனைவி வட்டாட்சியரிடம் அளித்துள்ள வாக்குமூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை பெறும் வகையில் இல்லை. குடும்பம் நடத்த போதுமான பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் மனுதாரர் மீது கூறப்பட்டுள்ளது.

 

தற்கொலைக்குத் தூண்டாத நிலையில் குடும்பம் நடத்த போதுமான பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்காக மனுதாரரின் மனைவி தற்கொலை முடிவை எடுத்ததாகவும், அதற்கு மனுதாரர் தான் காரணம் என்றும் கூற முடியாது. தற்கொலைக்கு தூண்டும் வகையில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே குற்றம் சாட்ட முடியும்.

 

மனுதாரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு மனுதாரர் தான் காரணம் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது மனுதாரர் தான் அவரது மனைவி தற்கொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு வர முடியாது. மனுதாரருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.