Show all

ஆனாலும் நம் உடலால் 400 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமாம்

இன்று வெயில் நான்கு நகரங்களில் சதம் அடித்தது. ஐந்து நகரங்களில் சதம் அடித்தது, அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது

என்றெல்லாம் படிக்கிறோம்.

குறிப்பாக இந்த ஆண்டு கோடையில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று ஒரு பக்கம் நம்மை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வைகாசி மாதம் அப்படியே மிச்சமிருக்கிறது. அதற்குள்ளாகவே வாட்டி வதைக்கிறது வெயில். இன்னும் மீதமிருக்கும் நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பலர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெயில் இன்னும் நான்கு மடங்கு அதிகரித்து நானூறு டிகிரி ஃபாரன்ஹீட் வரை சென்றாலும் நம் உடல் அந்த வெப்பத்தை தாங்கும் சக்தி படைத்ததுதான்; கவலைப்பட வேண்டாம்.

 

100 டிகிரி ஃபாரன்ஹீட் என்பது அதிகமான வெப்பம்தான். இந்தக் கோடையில் சராசரியாக நாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத்தான் பொறுத்துக் கொள்கிறோம். 100 டிகிரியைத் தாண்டிவிட்டாலே ‘ஐயோ... தாங்க முடியவில்லை’ என்று அரற்றி விடுவோம்.

 

110 டிகிரி ஃபாரன்ஹீட் என்றாலே நிச்சயமாக பலர் மயங்கி விழத்தான் செய்வார்கள். ஆங்காங்கே சிலர் சுருண்டு விழுந்து இறக்கும் விபத்துகளும் நிகழும். குறிப்பாக இந்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இப்படி நிறைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக இப்போதே செய்திகள் வருகின்றன.

 

வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்களுக்கு இந்த 110 டிகிரி வெப்பம் நிச்சயம் அபாயம்தான். இளநீர், கூல்டிரிங்க்ஸ், ஐஸ்மோர் என்று குடித்து நமது உடம்பில் நீர்ச்சத்தை குறைந்தபட்சமாகவாவது பராமரித்துக் கொள்வது அவசியம்.

110 டிகிரி வெப்பத்திற்கே மயங்கி விழுந்தால் 400 டிகிரி வெப்பத்தை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? இதுவரை அப்படி நடந்திருக்கிறதா..?

ஆஸ்திரேலியாவில் கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 131 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 1913ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான வெப்பம், 56.7 டிகிரி செல்சியஸ் (அதாவது 134.06 டிகிரி ஃபாரன்ஹீட்).

வெப்ப நிலையை அளவிடும் முறை வந்தபிறகு, உலகில் இதுவரை பதிவான வெப்பநிலைகளில் இதுவே அதிகபட்சமான வெப்பநிலை ஆகும்.

அதிகபட்சமான வெப்பநிலையே 134 டிகிரி ஃபாரன்ஹீட் என்கிறபோது எப்படி நானூறு டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும்?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றிய ஆராய்ச்சிகள் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சிக்குமுன் இன்னொரு தகவலைத் தெரிந்துகொள்வது நல்லது.

 

ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிடும் வெப்பநிலைகள் அனைத்தும் நிழலில் வைத்து எடுக்கப்படுபவை. ஆனால், உலகில் எங்கு ‘வெப்பநிலை அளவு’ பதிவு செய்யப்பட்டாலும் அவை நிழல் வெப்பநிலை என்று கருதி விட வேண்டாம். ஒரு வெப்பமானி, நிழலில்தான் வெப்பநிலையை சரியாகப் பதிவு செய்யும். ஒரு நாளின் வெப்பநிலை என்பது, அன்று காற்றில் இருக்கக்கூடிய வெப்பநிலையைக் குறிக்கிறது. இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை என்றால், இன்று காற்று 100 டிகிரி வெப்பத்துடன் வீசுகிறது என்று பொருள்.

இப்படி காற்றின் வெப்பநிலையைக் கணக்கிட வேண்டி இருப்பதால், வெப்பமானியை நிழலில் வைத்துதான் வெப்பநிலையைக் கணக்கிட வேண்டும். வெப்பமானியை நேரடியாக வெயிலில் வைத்தால் அது மேலும் சூடாகிவிடும். அடுப்பில் வைக்கிற பாத்திரம் போல, வெயிலில் வைக்கும் வெப்பமானி சூடாகி, இஷ்டத்திற்கு வெப்பநிலை எகிறிவிடும்.

சுற்றிலும் இருக்கிற வெப்பநிலையைப் புறந்தள்ளிவிட்டு காற்றில் இருக்கும் உண்மையான வெப்பநிலையைக் கணக்கிடும் வெப்பமானி மாதிரிதான், கிட்டத்தட்ட நம் உடலும் செயல்படுகிறது.

நமது உடல் வெப்பநிலையை சராசரி அளவில் வைத்துக்கொண்டு, அதிக வெப்பநிலை நம்மை நெருங்கவிடாமல் தடுக்கிறது.

உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையானது வெப்பத்தை எதிர்க்கிறது. நம் வியர்வையே, உடலைச் சுற்றியிருக்கும் காற்றில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி வெப்பநிலையை போதுமான அளவுக்கு குறைக்கிறது.

வெப்ப மூலத்தை உடல் நேரடியாகத் தொட முடியாத அளவில் வியர்வை இந்தச் சமயத்தில் நமக்கு ஊடகமாகப் பயன் படுகிறது. நானூறு டிகிரி வரை தாங்க முடியும் என்று சொன்னோமே அது எப்படி?

மனித உடல் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலையைக் கண்டுபிடிப்பதற்காக பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

‘ப்ளாக்டன் சென்ட்ரீ’ என்ற இங்கிலாந்து அறிஞர், சூடாக்கப்பட்ட பேக்கரியில் (அடுமனையில்) பல மணி நேரம் தங்கியிருந்தார். அந்த ஆராய்ச்சியின் விளைவாக நம் உடல் படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலையில் நானூறு டிகிரி வரை தாங்கும் சக்தி படைத்தது என்று கூறுகிறார்.

நாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கே படபடப்பாகி விடுகிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.