Show all

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் இரண்டரை மணி நேரம் கட்சி அலுவலகத்தில் காத்திருந்ததாகவும், கடைசி வரை அவர்கள் வராததால் ஏமாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அக்கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆனால், என்னுடைய தலைமைக்குதான் நீங்கள் வர வேண்டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்தார். இதனால், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக சேருமா அல்லது விஜயகாந்த் தலைமையின் கீழ் மக்கள் நலக்கூட்டணி இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்த நிலையில், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவக் கொலையை கண்டித்து சென்னையில் நேற்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் விஜயகாந்த்தை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திப்பாக தகவல் பரவியது. அதனால், தன் தலைமையை ஏற்க அவர்கள் முடிவு செய்துவிட்டதாக விஜயகாந்த் நம்பியதாகவும் தெரிகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வழக்கமாக நண்பகல் 12 மணிக்குதான் விஜயகாந்த் வருவார். ஆனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களின் வருகையை எதிர்பார்த்து காலை 11 மணிக்கெல்லாம் அவர் வந்துவிட்டார். அந்த நேரத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அவர்கள் புறப்பட்டு வர இருப்பதாக விஜயகாந்த்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் 1.30 மணி வரை காத்திருந்த விஜயகாந்த் ஏமாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.