Show all

பாக்கெட்டில் இருந்த ஐபோன்6 வெடித்தது

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் தவறி விழுந்த பொழுது, அவரது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்த ஐபோன் 6 வெடித்தது. இந்த விபத்தில் அந்த வாலிபரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தைச் சேர்ந்தவர் காரெத் க்ளியர் (36). நிர்வாகவியல் ஆலோசராக பணியாற்றி வருகிறார். இவர் சென்ற வார இறுதியில், தன்னுடைய சைக்கிளில் சிறு பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸ் பாக்கெட்டில் அவருடைய ஐபோன் இருந்தது. சென்று கொண்டிருக்கும் பொழுது க்ளியர் திடீரென்று தடுமாறி கீழே விழுந்தார். அப்பொழுது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஐபோன் வெடித்தது. இதனால் அவரது காலில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. காயம்பட்டுள்ள தன்னுடைய புகைப்படத்தை அவர் தன்னுடைய சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிக்கையில் க்ளியர் தெரிவித்ததாவது: கீழே விழுந்தவுடன் எனது பின் பாக்கெட்டில் இருந்து புகை வருவதை பார்த்தேன். பின்னர் உடனடியாக என்னுடைய வலது காலின் மேற்பகுதியில் கடுமையான வலி உண்டானது. ஷார்ட்ஸிலிருந்து எதுவோ உருகி வருவது போன்ற உணர்வு உண்டானது. அத்துடன் கடுமையான பாஸ்பரஸ் வாசனையும் வந்தது. இந்த காயத்தை சரி செய்ய எனக்கு தோல் திசு மாற்று சிகிச்சை செய்ய வேண்டி வநதது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். பொது மக்களுக்கு இந்த அபாயம் குறித்து அந்நிறுவனம் அறிவுறுத்த வேண்டும் என்றும் விரும்புகிறேன். தகவல் குறித்து அறிந்ததும் உடனடியாக என்னைத் தொடர்பு கொண்ட ஆப்பிள் நிறுவனம், நிலைமையின் தீவிரம் கருதி மேலும் தகவல்களைக் கேட்டுள்ளது. மேலும் எனக்கு வேறு ஒரு போனை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு க்ளியர் தெரிவித்தார். லித்தியம் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரிகள், ஏதேனும் ஒரு பொருளுடன் மோதும் பொழுது வெடிக்கும் வாய்ப்பு உள்ளது . உதாரணமாக லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஹோவர்போர்டு’ எனப்படும் சறுக்குப் பலகைகள் மூலம், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு மட்டும் 12 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம், செல்பேசி பேட்டரிகள் மூலம் விபத்துகள் ஏற்படுவதாக ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் புகார் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.