Show all

‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று பேசியதால் சட்டப் பேரவையில் அமளி

திமுக உறுப்பினர்களைப் பார்த்து ‘89 வயக்காட்டு பொம்மைகள்’ என்று அதிமுக உறுப்பினர் முத்தையா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று 3வது நாளாக நடைபெற்றது. இதில் எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினர். அப்போது, அதிமுக உறுப்பினர் முத்தையா, ‘89 வயக்காட்டு பொம்மை’ என பேசினார். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுக வலியுறுத்தியது. ஆனால், அவரது பேச்சு நீக்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவில் பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றும் un-parliamentary சொல் அல்ல. கெட்ட வார்த்தை அல்ல. மேலும், உறுப்பினர் பேசுகின்றபோது, யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர் வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றிப் பேசினார். இங்கிருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை’ என்றார். இதைத் தொடர்ந்து, முத்தையாவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் அவர்களை அமைதி காக்கும்படி கூறினார். தொடர்ந்து அமளியில் திமுக உறுப்பினர்கள் ஈடுபட்டதால், அவை நடவடிக்கையை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் தனபால் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சர்வாதிகார மனப்பான்மையுடன் சபாநாயகர் செயல்படுகிறார் என்றும், சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கடைசி வரை போராடினோம், 131 கொத்தடிமைகள் என நாங்கள் கூறியது மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி கூறுகையில், சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத சம்பவம் இன்று நடந்துள்ளது என்றார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்தாண்டில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.