Show all

மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி.

பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி என தெரியவந்துள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாடு பயணத்தின் செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். இதன்படி பெறப்பட்ட தகவலில் இருந்து பிரதமர் மோடி முதல் ஓராண்டில் மட்டும் சென்ற 16 நாடுகளுக்கான பயணச் செலவு ரூ.37.22 கோடி என தெரியவந்துள்ளது. 2014 ஜூன் தொடங்கி 2015 ஜூன் வரையிலான காலகட்டத்தில் மோடி 20 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிஜி, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணச் செலவுதான் மிகவும் அதிகம். பூடானுக்கு சென்ற பயணச் செலவு மிக மிக குறைவு. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது ஓட்டலில் தங்குவது உள்ளிட்ட வகையில் ரூ.5.60 கோடி செலவானது. இதில் அவருக்கு கார் ஏற்பாட்டிற்கு மட்டும் ரூ.2.40 கோடி செலவானது.

2014ல் நியூயார்க் சென்ற மோடிக்கு அவருடன் வந்த பாதுகாப்புப் படையினர் ஓட்டலில் தங்குவதற்கு ரூ.9.16 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மோடி, வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ரூ.11.51 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நியூயார்க்கில் உள்ள பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தனர். மேலும் பிரதமர் மோடியின் பயணத்தின் போது பிரசார் பாரதியின் பணிகளுக்காக ரூ.39 லட்சம் கார் வாடகைக்காக செலவிடப்பட்டுள்ளது. அதே போல் அவர்கள் தங்குவதற்கு என ரூ.3 லட்சம் தனியாக செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி சென்ற போது ஓட்டல் உள்ளிட்ட வசதிகளுக்காக தூதரகம் ரூ.3.80 லட்சம் செலவிட்டுள்ளது.

மோடி சீனாவுக்கு சென்ற போது ஓட்டலில் தங்குவதற்கு மட்டும் ரூ.1.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. வாகனங்கள் வாடகைக்காக ரூ.60.88 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. விமானம் தொடர்பாக ரூ.5.90 லட்சம் செலவானது. அதிகாரிகளுக்கு தினசரி படி என்ற வகையில் ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் வங்க தேச பயணத்தின் போது மொத்தம் ரூ.1.35 கோடி செலவானது. அந்த பயணத்தின் போது இணையத்தள சேவைக்காக மட்டும் ரூ.13.83 லட்சம் மற்றும் மொழிபெயர்ப்பு கருவிகள் வாங்குவதற்காக ரூ.28.55 லட்சம் செலவானது.

பிரதமர் மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணம் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திற்கு வராத பிரதமர் என்று எதிர்கட்சிகள் கிண்டலடித்தன. இவரது முதல் ஆண்டில் மட்டும் 53 நாட்கள் வெளிநாடுகளில் கழித்துள்ளார். மற்ற முந்தைய பிரதமர்களைக் காட்டிலும் முதல் ஆண்டில் மட்டும் 17 நாடுகளுக்கு மோடி சுற்றுப் பயணம் செய்துள்ளார். ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா பயணச் செலவை வெளியிட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மறுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.