Show all

ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை...

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும்,

7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே தீர்ப்பளித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையின் 7 புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி முன் தனித்தனியே ஆஜரான குற்றவாளிகள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தங்களது குடும்பச் சூழ்நிலைகளையும், ஏற்கெனவே சிறையில் கழித்த காலங்களையும் கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைத்து வழங்குமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் தரப்பு வாதங்களும், அரசுத் தரப்பு வாதங்களும் அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன. குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் சிறையும் விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், தண்டனை மீதான உத்தரவை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஷிண்டே கடந்த வாரம் தெரிவித்தார். அதன்படி, மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.