Show all

இரண்டு தேர்தல் அறிக்கைகள்! திமுக மற்றும் அதிமுக

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை பதிகை செய்யப்படும். நடுவண் அரசின் வரி வருவாயில் 60 விழுக்காடு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ தொடர்வண்டி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச தொடர்வண்டிப் பயண சலுகை வழங்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். காவிரி கழிமுகம் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். 

கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும். இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். 

நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். 

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக! தான் நடைமுறை படுத்த இருக்கிற திட்டங்களைத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்திருக்கும் நிலையில்;,

அதிமுகவோ! நடைமுறை படுத்தவிருக்கிற திட்டங்களை நடுவண் அரசிடம் வேண்டுகோள் வைக்கப் படும் என்றே தெரிவித்திருப்பதை தமிழக மக்கள் கவனத்தில் கொள்வார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.