Show all

12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை  தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் நிலைமை; மிகவும் பரிதாபமாக உள்ளது.  வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள் ஆகியவை மட்டுமின்றி பாட நூல்களையும் மாணவர்கள் இழந்துள்ளனர்.

குடிசைகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கடந்த ஒரு மாதமாக அனுபவித்து வரும் துயரம் அவர்களை மனதளவில் மிக மோசமாக பாதித்திருக்கிறது. சில  மாணவர்கள் தங்கள் கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வௌ;ளத்திற்கு பலி கொடுத்துள்ளனர்.

இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப  பல மாதங்கள் ஆகும். இம்மாணவர்களால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை எழுதுவதோ, மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இறுதித்தேர்வுக்கு தயாராவதோ சாத்தியமில்லை.

கடந்த 1984 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நச்சுவாயுக் கசிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாயினர். இதனால் போபால் மாவட்டத்தை  பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜுன்சிங் ஆணையிட்டார். அதன்படி அங்கு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.

அதேபோல், தமிழ்நாட்டிலும்  வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை  தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை  வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். என வலியுறுத்தியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.