Show all

தேர்தல் சுனாமி அலை தே.மு.தி.க.வை சுருட்டி வீசியுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஓசை இல்லாத சுனாமி போல வந்து தமிழகத்தில் சில கட்சிகளை துவம்சம் செய்து இருக்கிறது.

 

இந்த துவம்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கட்சிகள்தான்.

 

பாதிக்கப்பட்ட கட்சிகளில் இன்று மிக, மிக பரிதாபமான நிலைக்கு விஜயகாந்தின் தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது.

திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி தே.மு.தி.க.வை தொடங்கினார்.

 

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக தே.மு.தி.க. போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார்.

 

அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் இருந்து தே.மு.தி.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். என்றாலும் அந்த தேர்தலில் தே.மு.தி.க. சுமார் 12 சதவீதம் வாக்குகளை பெற்று எல்லாரையும் மலைக்க வைத்தது.

 

3 தொகுதிகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான வாக்குகளையும் 33 தொகுதிகளில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான வாக்குகளையும் தே.மு.தி.க. பெற்று பலம் பொருந்திய கட்சியாக உயர்ந்தது. 48 தொகுதிகளில் 7 முதல் 10 சத வீதம் வாக்குகளை தே.மு.தி.க. பிரித்ததால்தான் அந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.

 

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டது. அந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 29சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.

 

அது மட்டுமின்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. கட்சித் தொடங்கிய ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசைக்கு வந்து விட்டதால் விஜயகாந்தும், தே.மு.தி.க.வினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

அதே வேகத்தில் எதிர்க்கட்சியாக இருந்து விஜயகாந்த் விறுவிறுப்பாக செயல்பட்டிருந்தால் தே.மு.தி.க. மேலும் எழுச்சி பெற்றிருக்கும். ஆனால் அ.தி.மு.க. அரசுடன் மோதல் போக்கை கடை பிடித்ததால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கியது.

 

தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விஜயகாந்திடம் இருந்து விலகினார்கள். 9 தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் விலகிய நிலையில் விஜயகாந்தின் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்த பிறகும் அவர் உடல் நலம் அவரது அரசியல் ஈடுபாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2006 தேர்தலில் 10 சதவீதமும், 2011 தேர்தலில் 8 சதவீதமும் வாக்குகள் பெற்றிருந்ததால் தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணி முக்கியத்துவம் பெறும் என்றும் பேசப்பட்டது.

 

தமிழக மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த தடவை தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, கடைசியில் வைகோவின் மக்கள் நலக்கூட்டணியுடன் போய் விஜயகாந்த் சேர்ந்தார்.

 

அப்போதே தமிழக வாக்காளர்களில் கணிசமானவர்களுக்கு “சப்”பென்று ஆகி விட்டது. விஜயகாந்த் எடுத்த முடிவை மக்கள் மனம் ஏற்கவில்லை.

 

இந்த நிலையில் பொது இடங்களில், பிரசார கூட்டங்களில் அவர் நடந்து கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. கேலிக்குள்ளானது. சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் நடவடிக்கைகள் பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்பட்டன.

 

அந்த சமயத்தில் அவரது பேச்சும் மக்களுக்கு புரியாமல் போய் விட்டது. அவர் பிரசாரம் சுத்தமாக மக்களிடம் எடுபடவில்லை. மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்ந்த அவர் காமெடியின் ரேஞ்சுக்கு தள்ளப்பட்டு விட்டதாக அரசியல் நிபுணர்கள் கவலையுடன் கூறினார்கள்.

 

வைகோ, திருமாவளவன் மற்றும் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் செய்த பிரசாரமும் விஜயகாந்துக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மக்களின் மனம் தானாகவே அ.தி.மு.க., தி.மு.க. பக்கம் திரும்பி விட்டது. அதன் காரணமாக தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்துள்ளது.

 

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமாவது ஜெயிப்பார் என்று சிலர் ஆரூடம் கூறியபடி இருந்தனர். அதுவும் பொய்த்து விட்டது. இரண்டாவது இடத்துக்கு கூட வர முடியாத விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியும் ஒன்றாகும். கிராமத்து மக்கள் தன்னை இன்னமும் “கருப்பு எம்.ஜி.ஆர்.” என்று நினைத்து கொண்டு ஓட்டு போடுவார்கள் என்று எதிர் பார்த்தார். அது ஏமாற்றமாகி விட்டது.

 

தோல்வி அடைந்தது மட்டுமின்றி தனது வைப்புத் தொகையையும் விஜயகாந்த் இழந்துள்ளார். 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்துள்ளது.

 

ஒவ்வொரு தொகுதியிலும் தே.மு.தி.க.வால் சராசரியாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகளையே பெற முடிந்துள்ளது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட இந்த 11 ஆண்டுகளில் இந்த அளவுக்கு சரிவை தே.மு.தி.க. இப்போது தான் முதன் முதலாக சந்தித்துள்ளது.

 

லட்சக்கணக்கான வாக்குகள் உள்ள தொகுதிகளில் வெறும், 5 ஆயிரம், 10 ஆயிரம் வாக்குகள் பெறும் நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களும் தே.மு.தி.க.வை புறக்கணித்து இருப்பதையே காட்டுகிறது.

 

104 தொகுதிகளில் போட்டியிட்டதால் கணிசமான ஓட்டு சதவீதத்தை தே.மு.தி.க. பெற இயலும் என்று கருதப்பட்டது. ஆனால் விஜயகாந்த் அதிர்ச்சியில் உறையும் வகையில் தே.மு.தி.க. ஓட்டு சதவீதம் படுபாதாளத்துக்கு சரிந்துள்ளது.

 

2011 தேர்தலில் 7.88 சதவீதம் வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. இந்த தடவை வெறும் 2.40 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. 5.48 சதவீதம் வாக்குகளை தே.மு.தி.க. இழந்துள்ளது.

 

2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேறு எந்த ஒரு கட்சிக்கும் இத்தகைய மோசமான வாக்கு இழப்பு ஏற்பட்டதில்லை.

 

சுமார் 6 விழுக்காடு வாக்காளர்கள் தே.மு.தி.க.விடம் இருந்து விலகி சென்றிருப்பது விஜயகாந்துக்கு அடுத்தடுத்து சோதனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அதன்படி தே.மு.தி.க., மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கப் போகிறது.

 

ஒரு கட்சி மாநில கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமானால் 6 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். தற்போது தே.மு.தி.க. அந்த விழுக்காடு வாக்குகளை எட்டவில்லை.

 

அதோடு சட்டமன்றத்திலும் தே.மு.தி.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாத கட்சியாக செயல்பட வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது.

 

கூட்டணி அமைப்பதில் விஜயகாந்த் எடுத்த தவறான முடிவே தே.மு.தி.க.வின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

தே.மு.தி.க.வுடன் சேர்ந்து போட்டியிட்ட ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஏற்கனவே மாநில கட்சி அந்தஸ்தை எட்டாமல் இருந்தன. இந்த தடவை ம.தி.மு.க. 0.90 சதவீதமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.71 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சிகளின் அந்தஸ்துகளும் பறிபோகும் நிலை உள்ளது.

 

அது போல இடது சாரிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனும் அந்தஸ்தை பறி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த தடவை இடது சாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை எந்த அலையும் வீசவில்லை. அலை இல்லாத அமைதியான கடல் ஆபத்தானது என்பார்கள். அது சரியாகி விட்டது.

 

அமைதியான இந்த தேர்தல் களத்தில் திடீரென ஏற்பட்ட சுனாமி அலை தே.மு.தி.க.வையும், மக்கள் நலக் கூட்டணியையும் மிச்சம் வைக்காமல் வாரி சுருட்டி வீசியுள்ளது. இந்த கட்சிகள் எப்படி மீட்சி பெறும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.