Show all

இன்று புகையிலைப் பொருட்களுக்கு விடை கொடுப்போம்: இயக்குநர் வெற்றிமாறன்

புதிய ஆண்டு பிறக்கும்போது மதுப்பழக்கத்தைக் கைவிடுதல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடுதல் என ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சபதம் எடுப்போம் இல்லையா, அதேபோன்று மே 31-ம் தேதி புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கைவிடத் தீர்க்கமான முடிவு எடுக்கலாம். சுமார் எட்டாண்டுகளுக்கு முன்புவரை மிகத் தீவிரமாகப் புகைபிடித்துக்கொண்டிருந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். தினசரி கணக்கில்லாமல் புகைப்பார். ஆனால், ஒருநாள் திடீரென அவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார்.

‘சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பொறுத்தவரை ஒருவர் பயன்படுத்த முயலாமல் இருப்பதுதான் மிகச் சிறந்தது. ஒருமுறை தொட்டுத்தான் பார்ப்போமே என்று தொட்டுவிட்டால், பின்பு தினமும் போராட்டம்தான். நான் புகைபிடிக்கும் பழக்கத்தைவிட்டு எட்டு ஆண்டுகள் ஆயிற்று.

அதற்கு முன் தினசரி ஏராளமாகப் புகைப்பேன். அடிக்கடி இந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று எண்ணுவேன். தினமும் போராட்டம், மன உளைச்சல். அதை விடுவதற்கு கடும் சிரமங்கள் பட்டேன். ஒருநாள் திடீரென்று முடிவு எடுத்து விட்டுவிட்டேன்.

ஆனால், இப்போதும்கூட அவ்வப்போது புகைபிடிக்க வேண்டும் என்கிற தூண்டுதல் ஏற்படுகிறது. ஏதேனும் ஒரு வகையில் அதனைக் கடந்துவிட வேண்டும். நான் என் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்துவதன் மூலம் அதனைக் கடந்துவிடுகிறேன்.

ஆனால், அந்த எண்ணத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதெல்லாம் அவரவர் சார்ந்திருக்கும் விஷயங்களைப் பொறுத்தது. நான் வெற்றி அடைந்த முறைகளால் இன்னொருவர் வெற்றியடைய முடியும் என்று சொல்ல இயலாது. அவர்களே போராடி வழி கண்டு பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களாகத் தொட்டதுதானே அது.

 

அதே நேரத்தில், உறுதியோடும் கவனத்தோடும் நிறுத்த வேண்டும். நிறுத்திய பின்புதான் அதனால் கிடைக்கும் ஆரோக்கியம், உண்மையான நிம்மதி என்ன என்பது புரியும்.      புகை பிடிப்பதைக் கைவிட்ட ஆரம்ப நாட்களில் சிரமமாக இருக்கும்.

புகைபிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறபோது உடனே வயிறு நிரம்ப குளிர்ச்சியான தண்ணீரைக் குடித்துவிடுங்கள். நிறைய தண்ணீரைக் குடிப்பது புகைபிடிக்கும் எண்ணத்தைத் தடுக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

புகையைக் கைவிட்ட நேரத்தில் பசி அதிகமாக எடுக்கும். பழங்கள் நிறைய சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும். தூங்கிவிடுங்கள்.

அதேசமயம் தேவையில்லாத எரிச்சல், கோபம் வரும். உடன் இருப்பவர்களிடம் கத்துவோம். ஆனால், அவர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்கிறார் வெற்றிமாறன்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.