Show all

குஜராத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் கூண்டோடு தற்காலிக நீக்கம்

குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பிரச்சனை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேரை கூண்டோடு தற்காலிக நீக்கம் செய்து அவைத்தலைவர் உத்தரவிட்டார். குஜராத்தில் அண்மையில் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார். தற்போது, சட்டபேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டபேரவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலா தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து உனா சம்பவத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். உனா சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் கையில் பதாகையுடன் வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவையில் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்தார். அமளியில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்து அவைத்தலைவர் உத்தரவிட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட மற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் அவை கூடியதும், திரும்பவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதாகைகளை உடலில் கட்டிக் கொண்டு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து இன்று அவைக்கு வந்திருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேரையும் கூண்டோடு தற்காலிக நீக்கம் செய்து அவைத்தலைவர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 56 ஆக உள்ளது. ஏற்கனவே உனா சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநிலத்தில் தலித்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கி தலைமையில் அக்கட்சியினர், ஜனாதிபதி பிரணாப்பை நேற்று சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் சோனியாவையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.