Show all

ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ அறைகூவல்

2 ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான். வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் வழக்குரைஞர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி:

திமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரவு எனக்கு தாக்கீது கொடுக்கப்பட்டிருக்கிறது. கூறிய வார்த்தையை திரும்பப் பெறவில்லை எனில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. என் மீது வழக்குத் தொடர்ந்தற்கு மகிழ்ச்சி.

ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தேன். அதைத் தொடர்ந்து என் மீது அவதூறு வழக்குப் போட்டப்பட்டது. வழக்குப் போட்டவர்கள் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல ஈழத்தில் நடப்பது என்ன என்று பேசியதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் என்மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டது. பிரிவு 124 ஏ-ன் கீழ் வழக்குப் போட்டப்பட்டிருப்பதால் சட்டத்தின் படி எனக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம். இந்த வழக்கில் சாட்சிகள் கூட விசாரிக்கப்பட்டுவிட்டன. ஒருபோதும் நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெற மாட்டேன்.

பொடா வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதியிடம் நான் நேற்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என்று கூறியவன் நான். அதனால் இந்த வழக்கைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

 

கூட்டணி குறித்து ரூ.500 கோடி திமுக பேரம் பேசியதாக நான் கூறியதைத் தொடர்ந்து எனக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியதுகூட திமுக தலைவருக்குத் தெரிந்திருக்கவாய்ப்ப்பில்லை, அவர் வழக்குப் போட நினைத்திருக்க மாட்டார்.

எங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கு பேரவைத் தேர்தலில் வாய்ப்பு, பணம் தருகிறேன் எனக் கூறி மதிமுகவைச் சேர்ந்தவர்களை திமுகவில் சேர்த்தனர். கருணாநிதிக்குத் தெரியாமல் எல்லாம் நடக்கிறது என்று நான் புகார் தெரிவித்த பின்னர், 3 நாள்கள் கழித்து திமுகவில் எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என கருணாநிதியை அறிக்கை விட வைத்திருக்கின்றனர்.

இப்போதும் அதுபோன்றே நிகழ வாய்ப்ப்பிருக்கிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடாக்கப்பட்ட்டிருக்கிறார். கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர்.

ஷாகித்பால்வா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டி.டி. யாரிடம் கொடுக்கப்பட்டது.

ஷாகித்பால்வா- ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக்பாட்ஷா  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

சாதிக்பாட்ஷா மரணத்தின் பின்னணி, என்ன நடந்தது என்பதை சிபிஐ தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளேன். சாதிக்பாட்ஷா தற்கொலைக்கு திமுக தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறேன்.

 

இதற்கு வழக்குப் போட வக்கிலாத திமுக பொருளாளர் ஸ்டாலின்,  தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேரம் நடத்துகிறது என நாளிதழ்களில் வந்த செய்தியைக் குறிப்பிட்டு நான் பேசியதைக் காரணம் காட்டி எனக்கு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

 

தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறேன். 2 ஜி ஸ்பெக்டரம் பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான். வேண்டுமானால் என் மீது மற்றொரு வழக்குப் போடப்படட்டும் . அதையும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் வைகோ.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.