Show all

சர்ச்சை கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: நிதின்கட்கரி

சர்ச்சை கருத்துகளை வெளியிடும் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இவரின் பேச்சால் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிகார் தேர்தல் தோல்விக்கு முன்னணியில் இருந்து செயல்பட்ட தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என கட்சியிலிருந்து ஒரங்கட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, கோவிந்தாச்சார்யா, அருண் ஜோதி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சி வெற்றி பெற்றால் அதற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள், தோல்விக்கு பொறுப்பேற்காமல் நழுவுவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மோடி பிரதமராகவும், அமித்ஷா தலைவராகவும் பொறுப்பேற்ற பின் பாஜக பலவீனமடைந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பிகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியையும், கட்சித் தலைவர் அமித் ஷாவையும் மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி மூத்த தலைவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் சரியல்ல. பாஜக குடும்ப கட்சி அல்ல தொண்டர்களின் கட்சி என்றும் கூறினார். வெற்றியோ அல்லது தோல்வியோ அது அனைவரையும் சார்ந்தது என அவர் தெரிவித்தார்.

பிகாரில் கூட்டணியால் தான் தோல்வியடைந்ததாக கூறிய அவர் இது தனிப்பட்ட ஒருவரின் தோல்வியல்ல கட்சியின் தோல்வி ஆகும் என்றார்.

அத்வானி தலைவராக இருந்த போதும் பாஜக தோல்வியை சந்தித்தது என சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற சர்ச்சை கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது கட்சித் தலைவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.