Show all

தினகரன் தலைமையில் மூன்றாவது அணிக்கான ஓளிமயமான வாய்ப்புகள்!

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக, திமுக அணிகள் அரங்கு நிறைந்த நிலையில், மூன்றாவது அணிக்கான தேவை தமிழகத்தில் எழுந்துள்ளது. 3-வது அணியில் இடம் பெறுவதற்கான காய் நகர்த்தல்களில் கட்சிகள் இறங்கியிருக்கின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அதிமுக தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் ராமதாஸ்.

அடுத்த சில மணி நேரங்களில் நடுவண் அமைச்சர் பியூஷ் கோயலும் சென்னை வந்து அதிமுக-பாஜக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்தார். தொடர்ந்து தேமுதிக.வை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அதிமுக மேற்கொண்டது.

தேமுதிக.வுக்கு 3 தொகுதிகளை வழங்க அதிமுக தயாரானதாக கூறப்படுகிறது. ஆனால் பாமக.வுக்கு இணையாக 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மேலவைத் தொகுதி அல்லது 8 நாடாளுமன்றத் தொகுதிகளை தேமுதிக கேட்டதாக தெரிகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன்னை சந்தித்த போதும் விஜயகாந்த் இதில் உறுதி காட்டியிருக்கிறார்.

ஆனால் பாமக, பாஜக கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 28 தொகுதிகளை கையில் வைத்திருக்கும் அதிமுக, 25 தொகுதிகளுக்கு குறையாமல் இரட்டை இலை சின்னத்தை களம் இறக்க விரும்புகிறது. எனவே தேமுதிக.வுக்கு 3 தொகுதிகளுக்கு மேல் வழங்க அதிமுக விரும்பவில்லை. இதனால் தேமுதிக.வுடனான கூட்டணிப் பேச்சில் முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.

திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள், இரட்டை இலக்கத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதர கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் மட்டுமே வழங்கிவிட்டு, 25 தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புவதாக கூறப்படுகிறது. புதிய கட்சிகளை இழுத்து இடம் கொடுக்கும் நிலையிலும் திமுக இல்லை.

எனவே இந்த இரு அணிகளிலும் இடம் பெறாக கட்சிகள் 3-வது அணியை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இதுவரை இரு பெரிய கட்சிகளுடனுன் சேர முடியாத நிலையில் இருக்கின்றன.

கடைசி நேரத்தில் திமுக, அதிமுக அணிகளில் இடம் பெற முடியாத கட்சிகளும் 3-வது அணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமாகா சார்பில் விடியல் சேகர் இன்று அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேசினார். அப்போது தமாகா.வுக்கு ஒரு இடம் தரத் தயாராக இருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் தங்கமணி கூறியதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த விடியல் சேகர், 'நான் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. கூட்டணி பேசும் அதிகாரம் ஜி.கே.வாசனுக்கு மட்டும்தான் உண்டு' என நழுவினார். எனவே த.மா.கா.வும் 3-வது அணியை தேர்வு செய்யும் நிலை உருவாகலாம்.

அதிமுக அணியில் இருந்து வெளியேறிய தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயகக் கட்சி, கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை, வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் 3-வது அணியை தேர்வு செய்யும் மனநிலையில் இருக்கின்றன.

அடுத்த இரு நாட்களில் அதிமுக, திமுக அணிகள் இறுதி வடிவம் பெறும் சூழலில், 3-வது அணியும் உறுதி செய்யப்பட்டுவிடும். இந்த அணி தினகரன் தலைமையை மையமாக வைத்து கட்டமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.