Show all

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை: உயர் அறங்கூற்றுமன்றம்

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள சென்னை உயர் அறங்கூற்றுமன்றம், வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி வைரமுத்து சார்பில் அவரின் வழக்கறிஞர் வீரகதிரவன் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளார்.

அதில், ஆண்டாள் குறித்து இதழிலில் வைரமுத்து எழுதிய கட்டுரைக்காகக் குற்றச் சாயம் பூசப்பட்டுள்ளது. ஆண்டாளின் தமிழ்த் தொண்டு பற்றியே வைரமுத்து எழுதியுள்ளார். ஏற்கெனவே 13 கட்டுரைகள் அவர் எழுதியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளிக்கப் போராடியவர் ஆண்டாள் என்றே எழுதியுள்ளார். அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்த கருத்தையே வைரமுத்து மேற்கோள் காட்டினார். விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தைப் பெரிதாக்கியுள்ளன. இதனால் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம், ஆண்டாள் குறித்து தவறாக வைரமுத்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆராய்ச்சி கட்டுரையைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். சொந்தக் கருத்தைக் கூறுவில்லை. வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது, அரசு வழக்கறிஞர் ஆலோசிக்க இருப்பதாகக் கூறியதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணை 04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 க்கு (16.02.2018) ஒத்திவைக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,672

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.