Show all

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையில் மெனக்கெட தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் புலப்பாடு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த ஏழு பேர்கள் யாரோ! அவர்களுக்காக நாம் ஏன் மெனக்கெட வேண்டும என்கிற அசட்டை மனப்பான்மை இருப்பதை, அந்த மூன்று பேர் விடுதலை மட்டும் அவ்வளவு எளிதாக நடந்ததால், தெளிவாகத் தெரிவிக்கிறது. சட்ட அமைப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்துகின்றன அந்த ஏழுபேர்கள் விடுதலை தமிழக அரசால் சாத்தியம் என்று. ஆனால் விடுதலைதான் சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் நடுவண் அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமான கேள்விக்கு பதில் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க வேண்டும் என அவரது உறவினர்களும், தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. தங்கள் கட்சிக்காரர்களான அந்த மூன்று பேர்களை மட்டும் நேரடியாகவே விடுவித்து விட்;டு 7 பேரை விடுவிக்க மட்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் உள்துறை அமைச்சகத்துக்கு பேரறிவாளன் கடிதம் எழுதினார். அதில் குற்ற விசாரணை சட்டத்தின் 432 முதல் 435 வரையான பிரிவுகளின் கீழ், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக நடுவண் அரசு வகுத்துள்ள விதிகளின் நகலை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில், முன்கூட்டியே விடுதலை செய்யும் மாநில அரசின் முடிவை தடுக்கும் நடுவண் அரசின் விதிகள் என்னென்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடுவண் உள்துறை அமைச்சகம் பதில் ஏதும் அளிக்காததால் தகவல் அறியும் ஆணையத்தில் பேரறிவாளன் முறையிட்டார். இதையடுத்து பேரறிவாளன் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் 3 கிழமைகளுக்குள் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடுவண் தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நடுவண் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பேரறிவாளனுக்கு கடிதம் வந்தது. அதில் குற்றவாளிகளுக்கான தண்டனையை குறைக்கவோ தண்டனையை குறைப்பதிலிருந்து மாநில அரசை தடுக்கும் வகையிலோ எந்த விதியும் இல்லை. என்று தெளிவு படுத்தியிருக்கிறது. இதன் மூலம் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் நடுவண் அரசு தலையிட முடியாது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.